சுமார் 6.7 கோடி ஆண்டுகள் பழமையான டைரனோசொரஸ் ரெக்ஸ் என்ற இராட்சத வேட்டைக்கார டைனோசரின் முழுமையான புதைபடிவ எலும்புக்கூடு, நியூயோர்க்கில் உள்ள பிரபல சோதேபிஸ் ஏல மையத்தில் 50.1 மில்லியன் டொலருக்கு ஏலம் போய் புதிய உலகச் சாதனை படைத்துள்ளது.
டைனோசர் புதைபடிவம் ஒன்றுக்கு இதுவரை உலகிலேயே வழங்கப்பட்ட மிக அதிகபட்ச ஏலத்தொகை இதுவாகும்.
‘கஸ்’ என்று அன்போடு பெயரிடப்பட்டுள்ள இந்த டி-ரெக்ஸ் டைனோசர், 12 அடிக்கும் (4 மீற்றர்) அதிக உயரமுடையது. இதன் உடலின் ஒட்டுமொத்த எலும்புகளில் 60%-க்கும் அதிகமானவை முழுமையாகக் கண்டறியப்பட்டுள்ளதால், இதுவரை கண்டெடுக்கப்பட்ட டி-ரெக்ஸ் புதைபடிவங்களிலேயே இது “மிகவும் முழுமையான” ஒன்றாகும்.
அமெரிக்காவின் சவுத் டகோட்டா மாகாணத்தில் உள்ள ஒரு தொலைதூர பண்ணையில் கடந்த 2021 ஆம் ஆண்டு இது முதன்முதலாகக் கண்டறியப்பட்டது.
பனி உறைந்த நிலப்பரப்பு என்பதால், கோடைக்காலத்தில் மட்டுமே தோண்ட முடியும் என்ற நிலையில் 2021 முதல் 2023 வரை மூன்று கோடைகாலங்கள் செலவிடப்பட்டு இந்த எலும்புகள் தோண்டி எடுக்கப்பட்டன. அதன்பின்னர், ஆய்வகத்தில் இந்த எலும்புகளை ஒவ்வொன்றாக ஒன்றிணைத்து முழு வடிவத்திற்குக் கொண்டு வர மேலும் 3 ஆண்டுகள் கடின உழைப்பு தேவைப்பட்டுள்ளது.
இந்த ஆய்வுகளின் போது, அந்த டி-ரெக்ஸ் டைனோசரின் மண்டை ஓட்டில் மற்றுமொரு மிருகம் கடித்த பற்களின் தடயங்களும், அதன் வாழ்நாளில் உடைந்து பின்னர் தானாகவே குணமாகியிருந்த விலா எலும்புகளும் கண்டறியப்பட்டன. இவை பிற டைனோசர்களுடன் இரைக்காகவோ அல்லது எல்லைக்காகவோ நடந்த பயங்கரமான சண்டையைக் காட்டுகின்றன.
இதற்கு முன்னர் 2024 ஆம் ஆண்டில் ‘அபெக்ஸ்’ என்ற ‘ஸ்டெகோசொரஸ்’ வகை டைனோசர் ஏலம் போனதே சாதனையாக இருந்தது. தற்போது அந்தச் சாதனையை முறியடித்து, வரலாற்றிலேயே முதன்முறையாக 50 மில்லியன் அமெரிக்க டொலர் எல்லையைத் தாண்டிய புதைபடிவமாக ‘கஸ்’ மாறியுள்ளது.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த ஏலத்தில் டைனோசரை வாங்கிய அதிசெல்வந்தர் யார் என்ற விபரம் இதுவரை வெளியிடப்படவில்லை.
இந்த ஏலம் கோடீஸ்வரர்களிடையே புதைபடிவங்களைச் சேகரிக்கும் ஒரு புதிய அலையை உருவாக்கலாம் என விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர். எனினும், முந்தைய சாதனையை வைத்திருந்த ‘அபெக்ஸ்’ டைனோசரை வாங்கிய அமெரிக்கப் பில்லியனர் கென்னத் கிரிபின், அதனை நான்கு ஆண்டுகளுக்கு அமெரிக்க இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்திற்கு பொதுமக்கள் பார்வைக்காகக் கடனாக வழங்கியிருந்தார். எனவே, இந்த ‘கஸ்’ டைனோசரும் விரைவில் ஏதேனும் ஒரு பொது அருங்காட்சியகத்திற்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.





இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










